3 வது மாடி பால்கனியில் இருந்து குட்கா துப்பியபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து குட்கா துப்பியபோது உயர் அழுத்த மின்கம்பியின் தொடர்பால் 65 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தர்பூரைச் சேர்ந்த பிரபுலால் குப்தா, கஞ்ச் பசோடாவின் காயத்ரி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி கட்டிட மேஸ்திரியாகப் பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் பால்கனியில் இருந்தபோது, அருகே சென்ற 11 கே.வி. மின்கம்பியுடன் தொடர்பு ஏற்பட்டு அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்கம்பிகள் குறித்து மக்கள் புகார்
தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். குடியிருப்புகளுக்கு அருகே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் குறித்து ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.