முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது சொத்து விவரங்களை மறைத்துக் காட்டியதாகத் தொடரப்பட்ட வழக்குகளைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராகத் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட போது, அவரது சொத்து விவர அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி வழக்குகளும், வருமான வரித்துறை விசாரணைக்கான கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.
பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது வேட்புமனுவில் ஏற்பட்ட சில பிழைகளைத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, உரிய நேரத்தில் திருத்தி தாக்கல் செய்திருந்தார். அதனைத் தேர்தல் நடத்தும் அதிகாரியும் முறைப்படி ஏற்றுக் கொண்டார்.
மனுதாரர்கள் தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் திருத்தப்பட்ட மனுவைக் கணக்கில் கொள்ளாமல், நிராகரிக்கப்பட்ட ஆரம்பக்கால மனுவின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால், இதில் எவ்வித முறைகேடும் இல்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதேபோல், முன்னாள் துணை முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் தொகுதி) மற்றும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் சொத்து விவரங்கள் மற்றும் முதலீட்டு விவரங்கள் முறையாகக் குறிப்பிடப்படவில்லை என வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்துக்களைச் சரிபார்ப்பதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வைத்துள்ளதை நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி வேட்புமனுக்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அதில் போதிய ஆதாரங்களின்றித் தொடரப்பட்ட இந்த சொத்து விவகார வழக்குகளில் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.