எ.வ.வேலுவுக்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸ் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் உத்தரவு!

 

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த 'லுக் அவுட்'  நோட்டீஸைச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும் எ.வ.வேலு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இத்தகைய சூழலில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை; அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த மனுக்கள் குறித்து விரிவான பதில் மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி,  எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பினால் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எ.வ.வேலுவுக்கு எதிராக எந்தவிதக் கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.