பொன்ராஜ் மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாகத் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 12-ஆம் தேதி அரசியல் விமர்சகர் பொன்ராஜ், தவெக பெண் தொண்டர்கள் குறித்துக் குறிப்பிட்ட சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இக்கருத்துகள் பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தன் மீது பதியப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பொன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "குறிப்பிட்ட அந்தப் பேச்சானது எந்தவொரு உள்நோக்கத்துடனும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசப்படவில்லை" என்று வாதிட்டு வழக்கை ரத்து செய்யக் கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் பேசவில்லை என்ற பொன்ராஜின் வாதத்தை ஏற்க முற்றிலும் மறுத்துவிட்டார். மேலும், பெண்களின் கண்ணியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் மீதான வழக்குகளை இந்த கட்டத்தில் ரத்து செய்ய முடியாது எனக் கூறி, பொன்ராஜ் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து பொன்ராஜ் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தொடரும் எனத் தெரிகிறது.