மதுரை மேலூரில் அரசுப் பள்ளி பின்புறம் இளைஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் மெக்கானிக் கடையில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டுச் கிடப்பதாக மேலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் ஏ.எஸ்.பி சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவண்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் மகன் செல்லத்துரை (24) என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேலூர் கஸ்தூரிபாய் நகரில் தனது சகோதரி செல்விபிரியா வீட்டில் தங்கியிருந்து, தனது உறவினரான முருகனின் மெக்கானிக் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று இரவு தனது சகோதரியிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற செல்லத்துரை அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் அவர் மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட செல்லத்துரையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் பழகும் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.