பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு - மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு!

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன்  பாதாள சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் கோரியுள்ளது.

முதற்கட்டமாக மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளைத் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்குரிய திட்ட அறிக்கை கோரி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த 2 மாதங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து ஒப்புதல் பெறப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அடுத்த 3 மாதங்களில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மட்டுமே நேரடியாகச் செயல்படுத்தி வந்த இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவனங்களை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.50,000 டெபாசிட் செலுத்தி இ-டெண்டர் முறையில் விண்ணப்பிக்கலாம் என அழைக்கப்பட்டுள்ளது.