தீபாவளி ஷாப்பிங் செல்லும் மதுரை மக்களே கவனம்! நவ.8 வரை போக்குவரத்தில் மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் இன்று (நவம்பர் 5) முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கிச் செல்லவும், நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நவம்பர் 8-ஆம் தேதி வரை மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, மகால் ரோடு, கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள் மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் பகல் நேரத்தில் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை. நகருக்குள் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வணிக வாகனங்கள் குறிப்பிட்ட சந்திப்புகள் வழியாக இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
நவம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, தெற்கு மற்றும் கீழ மாசி வீதிகள் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
மேலும், தெற்கு மாசி வீதி, நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நவம்பர் 8 வரை வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களில் மாற்று பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடங்களை அறிய கியூ.ஆர். கோடு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.