மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்புப் பணியில் குதிரைப்படை போலீசார்!

 

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தக் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சீருடை அணியாத மப்டி போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாசி வீதிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் போலீசார் சைக்கிள்களிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தற்போது குதிரைகள் மூலம் போலீசார் ரோந்துப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதன்படி, 2 குதிரைகளில் போலீசார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் வலம் வந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.