மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா - CM விஜய் வாழ்த்து!

 

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைக்குப் பெயர்போன உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்தச் சிறப்பான நிகழ்வையொட்டித் தமிழக முதல்வர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு: வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நிறைவுபெற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழா குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழர்களின் பண்பாட்டு உன்னத அடையாளத்தை இவ்விழா உலகிற்கு உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்" என்றும் அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

குடமுழுக்கு விழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், கோயிலில் சிறப்பான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.