செப்.17-ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஏற்பாடுகள் தீவிரம்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் விமரிசையாக நடைபெறவுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், கழிப்பறை, தடையற்ற போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 11,000 முக்கியப் பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை நேரடியாகக் கண்டுகளிக்கச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வைத் தடையின்றிப் பார்க்கும் வகையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் கூட்ட நெரிசலைக் தவிர்க்கப் போக்குவரத்து மாற்றங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.