மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - நாளை மறுநாள் பூர்வாங்க பூஜைகள் தொடக்கம்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க பூஜைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகின்றன. வருகிற 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் அம்மன் சன்னதி சித்தி விநாயகர் சன்னதி முன்பு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, கஜபூஜை, கோ பூஜை மற்றும் தனபூஜை ஆகியவை நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ஆம் தேதி வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
செப்டம்பர் 11-ஆம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 182 யாக குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
யாகசாலை பூஜைகள் தொடங்கும் செப்டம்பர் 11 முதல் 16-ஆம் தேதி வரை மூலவர் சன்னதிகளில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை பக்தர்கள் தரிசிக்க முடியாது. அந்த நாட்களில் யாகசாலையில் உள்ள சுவாமி மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்; மகா கும்பாபிஷேக தினத்தன்று மட்டுமே மூலவரை தரிசிக்க இயலும்.
செப்டம்பர் 16-ஆம் தேதி காலை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி, காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெறும்.