மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்! 7 வண்ண பாஸ் வைத்தவர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும்?
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேகம் செப்.17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை நேரில் காண வரும் பக்தர்களுக்கு 7 வண்ணங்களில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிற பாஸ் வைத்திருப்பவர்களுக்கும் தனித்தனி நுழைவு வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எந்த நிற பாஸ் வைத்தவர்கள் எந்த வழியாக செல்ல வேண்டும்?
பச்சை நிற பாஸ்: நவீன் பேக்கரி சந்திப்பு → மீனாட்சி கார் பார்க்கிங் → கிழக்கு சித்திரை வீதி கேங்வே → அம்மன் கிழக்கு கோபுரம்.
மஞ்சள் நிற பாஸ்: வடக்கு ஆவணி மூல வீதி → தியாகி தாயம்மாள் தெரு → வடக்கு சித்திரை வீதி கேங்வே → வடக்கு கோபுரம் → நந்தவனப் படிகள்.
சிவப்பு நிற பாஸ்: மேற்கு ஆவணி மூல வீதி → பெரிய வளையல்காரத் தெரு → மேற்கு சித்திரை வீதி கேங்வே → மேற்கு கோபுரம் → மேற்கு 5 நிலை கோபுர உள்புறப் படிகள்.
பழுப்பு நிற பாஸ்: வடக்கு ஆவணி மூல வீதி → மேல பட்டமார் தெரு → வடக்கு சித்திரை வீதி கேங்வே → வடக்கு கோபுரம் → நந்தவனப் படிகள்.
நீல நிற பாஸ்: தெற்கு ஆவணி மூல வீதி → தெற்கு காவல்கூட தெரு → தெற்கு சித்திரை வீதி கேங்வே → தெற்கு கோபுரம் → தெற்கு ஆடி வீதிப் படிகள்.
ரோஸ் நிற பாஸ்: தெற்கு ஆவணி மூல வீதி → மீனாட்சி அம்மன் கோயில் தெரு → சோதனைச் சாவடி → தெற்கு சித்திரை வீதி கேங்வே → கிழக்கு அம்மன் கோபுரம் → வன்னி விநாயகர் சன்னதி எதிரிலுள்ள படிகள்.
ஊதா நிற பாஸ்: நவீன் பேக்கரி சந்திப்பு → மீனாட்சி கார் பார்க்கிங் → தெற்கு சித்திரை வீதி கேங்வே → கிழக்கு ராஜகோபுரம்.
பாஸ் வைத்தவர்கள் எப்போது கோவிலுக்குள் செல்ல வேண்டும்?
செப்.17-ம் தேதி காலை 5 மணி முதல் 7 மணி வரை செல்லுபடியாகும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே கோவில் மேல்தளத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிறத்துக்கான பாதையை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்த வேண்டும்.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பாஸ் வைத்திருப்பவர்கள் அண்ணாகுழி மண்டபத் தெரு → தெற்கு காவல்கூடத் தெரு → பழைய சென்ட்ரல் மார்க்கெட் சந்து வழியாக ஆவணி மூல வீதியை சென்றடைந்து வெளியேற வேண்டும்.
பொதுமக்கள் எப்போது தரிசிக்கலாம்?
காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 8.30 மணி முதல் 10 மணி வரை மூலஸ்தான அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
காலை 10 மணிக்கு பிறகு பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் தெற்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரம் வழியாக மட்டுமே கோவிலுக்குள் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்ததும் கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.
கும்பாபிஷேக நேரத்தில் அனுமதி அட்டை இல்லாதவர்கள் சித்திரை வீதிகளில் நிற்க அனுமதி இல்லை. பழைய அல்லது பாழடைந்த கட்டிடங்களின் மேற்கூரைகளில் நின்று நிகழ்வை பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.