மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.. கட்டணச் சீட்டு முன்பதிவு தொடங்கியது - ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
மதுரை என்றாலே திருவிழாக்களின் நகரம் தான்! உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
திருக்கல்யாணத்தைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், வரும் 22-ம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம். இணையதள முகவரி maduraimeenakshi.hrce.tn.gov.in அல்லது hrce.tn.gov.in. எல்லீஸ் நகரில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 'யாத்ரி நிவாஸ்' தங்கும் விடுதியில் நேரில் சென்றும் பதிவு செய்யலாம்.
ரூ.500 டிக்கெட் ஒருவர் அதிகபட்சம் 2 டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும். ரூ.200 டிக்கெட் ஒருவர் அதிகபட்சம் 3 டிக்கெட்டுகள் வரை பெறலாம். ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய முடியும். அடையாளச் சான்று (புகைப்படத்துடன்), மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி முன்பதிவு செய்ய அவசியம்.
நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 23-ம் தேதி எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் ஏப்ரல் 24 முதல் 27-ம் தேதிக்குள் யாத்ரி நிவாஸில் பணம் செலுத்தி டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஏப்ரல் 28-ம் தேதி காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். டிக்கெட் பெற்றவர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர வேண்டும். கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு கருதி குழந்தைகளை அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.