மதுரை பொதுக்கூட்டம்.. திடீரென 2வது முறையாக மாற்றப்பட்ட பிரதமரின் பேனர்!
மதுரை மண்டேலா நகரில் இன்று மாலை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்ட மேடையில், பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கான மேடை அலங்காரப் பணிகள் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதில் மேடையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பிரதமரின் படம் இன்று இரண்டு முறை மாற்றப்பட்டுள்ளது. முதலில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பிரதமர் மோடி தனது இரண்டு விரல்களை உயர்த்தி (வெற்றிச் சின்னம்) காட்டுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. திடீரென அந்தப் பேனர் அகற்றப்பட்டு, தற்போது பிரதமர் மோடி இரு கைகளைக் கூப்பி 'வணக்கம்' சொல்வது போன்ற புதிய புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை பிரதமரின் புகைப்படங்கள் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் நெருங்கும் வேளையில், 'வெற்றிச் சின்னம்' காட்டுவது போன்ற படங்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதா என்ற சட்ட ரீதியான ஆலோசனையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழக கலாச்சாரப்படி 'வணக்கம்' செலுத்தும் படம் மக்களை எளிதில் கவரும் என்பதால், கடைசி நேரத்தில் இந்த மாற்றத்தை பாஜக மேலிடம் செய்திருக்க வாய்ப்புள்ளது.
பிரதமர் இன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ள நிலையில், ஒரு ஆன்மீகத் தன்மையுடன் 'வணக்கம்' சொல்லும் படம் பொருத்தமாக இருக்கும் எனத் தொண்டர்கள் கருதுகின்றனர். மதுரை மண்டேலா நகர் பகுதி முழுவதும் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. இன்னும் சற்று நேரத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் இந்த மேடைக்கு வரவுள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த 'வணக்கம்' சொல்லும் பேனர் முன்புதான் அனைத்துக் கூட்டணித் தலைவர்களும் அணிவகுக்க உள்ளனர்.