மதுரை அருகே ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

 

 

மதுரை சமயநல்லூர் அருகே பழைய ஊராட்சி மன்றக் கட்டடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த ரவுடி, மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சமயநல்லூர் அருகே உள்ள பழைய ஊராட்சி மன்றக் கட்டடத்தில், குட்டிசாக்கு என்ற சூர்யா நேற்று (நவம்பர் 1) மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரைத் தாக்க முயன்றது. உயிர் தப்பிக்க ஓடிய சூர்யாவை அந்தக் கும்பல் விரட்டிச் சென்று முகத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த சூர்யா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை முன்விரோதம் காரணமாகப் பழிக்குப் பழியாக நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களைத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.