பகீர்... 4 வயது சிறுவன் கழுத்தறுத்துக் கொலை... சாக்குமூட்டையில் கட்டி குவாரியில் வீசிச் சென்ற உறவினர்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 4 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி குவாரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறுவனின் உறவினரான மணி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரபத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவி நாச்சியம்மாள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான 4 வயது மோகன், நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
மாலை வீட்டிற்கு திரும்பிய நாச்சியம்மாள், மகனை காணாததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால், அவரது தந்தை முருகன் கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையின்போது, முருகனின் உறவினரான கிருஷ்ணாவின் மகன் மணி என்பவர் சாக்குமூட்டை ஒன்றை எடுத்துச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.முதலில் குற்றச்சாட்டை மறுத்ததாக கூறப்படும் மணி, பின்னர் சிறுவனை கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி குவாரியில் வீசியதாக தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். இதையடுத்து அவரது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், குவாரியில் இருந்து சாக்குமூட்டையில் இருந்த சிறுவனின் உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, சிறுவனின் தந்தைக்கும் மணிக்கும் ஏற்கனவே தகராறு இருந்ததாகவும், அதன் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பாரபத்தி கிராமம் மட்டுமின்றி திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.