மதுரை பாண்டி கோவிலுக்குச் சென்ற நண்பர்கள்: வழியில் தீப்பிடித்து எரிந்த கார்!
மதுரை அருகே சாமி தரிசனம் செய்யச் சென்றவர்களின் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த நான்கு பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் மதுரை பாண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது.
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். காரில் இருந்த நான்கு பேரும் அவசரமாக கீழே இறங்கியுள்ளனர். அடுத்த சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.