“மதுரையில் ஒரே நாளில் 3 கொலைகள்! அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி!

 

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. போலீஸ் நிலையம் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், மேலூர் பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், நிலப்பிரச்சினை தொடர்பாக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் என நடந்த தொடர் கொலைகள் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மூன்று சம்பவங்கள் குறித்தும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (50). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமீபத்தில் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சோலையழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு அவர் சென்றிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அந்த நபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரவணனை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க சரவணன் ஓடிய நிலையில், அந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அமைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளநாதன்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை (21) என்பவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தொழில்நுட்பக் கல்வி பயின்ற இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மேலூர் பகுதியில் காயங்களுடன் அவர் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தொடர்பாக நண்பர்களுடனான தகராறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மூன்றாவது சம்பவம் மதுரை திருமோகூர் அருகே பெருங்குடி பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அன்னமயில் என்பவருக்கும் அவரது உறவினரான ராஜ்குமாருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அன்னமயில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் மதுரை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று கொலைகள் நடந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று சம்பவங்களுக்கும் தனித்தனி காரணங்கள் இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போலீஸ் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் முழுமையான பின்னணி தெரியவரும்.