நின்றிருந்த லாரி மீது கார் மோதி 2 பேர் பலி... திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பார்த்து திரும்பியபோது விபத்து…!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுசாமி (50), சண்முகம் (45), யுவராஜ் (50), சரவணன் (42), தேவராஜ் (47) ஆகிய 5 பேரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்றனர்.
விழாவில் கலந்து கொண்டு, கடலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய பொன்னுசாமி, சண்முகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். யுவராஜ், சரவணன், தேவராஜ் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.