ஆசிய கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்ற மதுரை வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் பரிசுத் தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு!

 

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானில் நடந்துவரும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கும், குறிப்பாக அவ்வணியில் இடம்பெற்றுத் திறமையை வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளது.

கமலினியின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்டித் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவரது எதிர்காலச் செயல்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், அரசின் பாராட்டைத் தெரிவிக்கும் விதமாகவும் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கமலினியின் இந்தச் சாதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கும், குறிப்பாய் விளையாட்டுத் துறை ஆர்வம் கொண்ட பெண்களுக்கும் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர் மேலும் பல சர்வதேசச் சாதனைகள் புரிய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.