மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: நாளை மதுரை புறப்படுகிறார் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்!

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.

சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் தெய்வானையுடன் முருகப்பெருமான் நாளை மாலை மதுரைக்கு புறப்படுகிறார்கள். தனது தாய் தந்தையரின் திருமணத்தை முன்னின்று நடத்த தம்பி முருகப்பெருமான் மதுரைக்கு வருவது சிறப்பம்சமாகும்.

திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை செல்லும் வழியில் 125-க்கும் மேற்பட்ட இடங்களில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். திருக்கல்யாணம் முடிந்த பிறகு 4 நாட்கள் மதுரையில் தங்கியிருக்கும் சுவாமிகள் மே 2-ந்தேதி மீண்டும் இருப்பிடம் திரும்புவர். இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.