அரசியலுக்கு வாங்க 'தல'... மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய அதிரடி போஸ்டர்!
மதுரை மாநகர் முழுவதும் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 'எதிர்காலமே அரசியலுக்கு வா' என்ற வாசகங்களுடன் மதுரையின் முக்கிய வீதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அஜித்தின் புகைப்படத்துடன் கூடிய இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, அரசியல் வட்டாரத்திலும் ஒரு சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துரை மட்டுமன்றி பந்தய கார் ஓட்டுநர் எனப் பல துறைகளில் சாதித்து வரும் அஜித்திற்கு மதுரையில் எப்போதும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. ஏற்கனவே அவர் பலமுறை தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து இத்தகைய அழைப்புகளை விடுத்து வருகின்றனர். குறிப்பாகப் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் அஜித்தின் நேர்மையான குணத்தை முன்னிறுத்தி, அவர் பொதுவாழ்விற்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்துகின்றன.
தற்போது லண்டன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் தனது கார் பந்தயப் பணிகளில் பிஸியாக இருக்கும் அஜித், அண்மையில் சென்னை வந்து தனது வாக்கைச் செலுத்தினார். அவர் வாக்களிக்க வந்தபோது திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரே திணறினர். அந்த அளவிற்குப் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள அஜித், ரசிகர்களின் இந்த அன்பான அழைப்பிற்குப் பின்னால் இருக்கும் கோரிக்கையை ஏற்பாரா அல்லது வழக்கம் போல் அமைதி காப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.