மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - நாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் சுமூகமாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுக்கூடங்களை 4 நாட்களுக்கு முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் காலத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நாளை அக்டோபர் 4ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6ம் தேதி நள்ளிரவு வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதே போன்று வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 9ம் தேதியன்றும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் திறக்க அனுமதி இல்லை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் தொடர்புடைய மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற பிற மதுபானக் கூடங்கள் அனைத்தும் இந்த உத்தரவின் கீழ் முழுமையாக மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாராவது மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது கடைகளைத் திறந்தாலோ அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதே போன்று தாராபுரத்திலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.