ஆட்டோ ஓட்டி... சுடச்சுட டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!

 

 

சென்னை மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் ஆட்டோ ஓட்டியும், பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்தும் பிரசாரம் மேற்கொண்டார்.

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் தொடர்ந்து 6-வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அத்திரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட திருமேற்கண்டிகை, கடமலைப்புத்தூர், தொழுப்பேடு, ஆத்தூர், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கடமலைப்புத்தூர் பகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் மரகதம் குமரவேலுக்கு ரோஜா மலர்களை தூவியும், ஆட்டம் பாட்டத்துடனும் வரவேற்பு அளித்தனர்.இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஆட்டோ நிறுத்தத்துக்கு சென்ற அவர், ஆட்டோவை தானே ஓட்டி அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்ற மரகதம் குமரவேல், அங்கு சுடச்சுட டீ போட்டுக் கொடுத்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.வேட்பாளரின் இந்த வித்தியாசமான தேர்தல் பிரசாரம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார்.