மகாராஷ்டிரா படகு விபத்து...  திருச்சியைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கிப் பலி

 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்ட சொகுசு படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நர்மதை நதியின் குறுக்கே அமைந்துள்ள இந்த அணையில் சுமார் 29 பயணிகள் படகு சவாரியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படகு அணையின் நடுப்பகுதிக்குச் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்தனர்.

இந்தக் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் மற்றும் அவரது உறவினர்கள் காசி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றுவிட்டு ஜபல்பூர் சென்றபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.

மீட்புப் படையினர் நடத்திய தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தி திருச்சியில் உள்ள அவர்களின் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.