இந்திய  தொழில்நுட்பத்தில்  சீறும் மகேந்திர கிரி போர்க்கப்பல்...   கடற்படையில் இணைப்பு!

 

மத்திய அரசின் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ், எதிரி நாடுகளின் ரேடார்களில் சிக்காத ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் கூடிய 7 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் 6-வது போர்க்கப்பலான மகேந்திரகிரி கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோலாகல விழாவில், இந்த பிரமாண்ட போர்க்கப்பல் முறைப்படி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மகேந்திரகிரி போர்க்கப்பல் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிநவீன ஏவுகணைகள், எதிரி நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களைத் துல்லியமாகக் கண்டறியும் கருவிகள் மற்றும் நவீன துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது இந்திய கடல் எல்லையைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், இந்திய பாதுகாப்புத் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. நவீன போர் முறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள மகேந்திரகிரி, கடற்படையின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறனை பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கப்பலின் வருகை அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்தியாவிற்குப் பெரும் வலிமையைத் தந்துள்ளது.