இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் - ஜம்மு காஷ்மீரில் கலக்கியவர்!

 

இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு உளவு அமைப்பான இண்டெலிஜென்ஸ் பீரோ அமைப்பின் புதிய இயக்குநராக  மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித்  அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய ஐபி அமைப்பின் இயக்குநராக இருக்கும் தபன்குமார் டேகா, இரண்டு முறை பணி நீட்டிப்பு பெற்று வரும் ஜூன் 30-ம் தேதியுடன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு நாட்டின் புதிய உளவுத்துறைத் தலைவராக மகேஷ் தீட்சித்தை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அவர் ஜூன் 30ம் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.

மகேஷ் தீட்சித் 1993-ஆம் ஆண்டு பேட்ச் ஆந்திரப் பிரதேச கேடரைச் சேர்ந்த மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக, இவர் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவராகவும்  பணியாற்றியுள்ளார் என்பது இவரது கூடுதல் சிறப்பாகும். உளவுத்துறையில் சுமார் மூன்று தசாப்தங்களாகப் பல மிக உணர்திறன் வாய்ந்த பிரிவுகளில் பணியாற்றியுள்ள மகேஷ் தீட்சித், ஐபி அமைப்பிலேயே சிறப்பு இயக்குநர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குப் பிந்தைய மிக இக்கட்டான காலகட்டத்தில், ஸ்ரீநகரில் உள்ள துணை உளவு அமைப்பின் தலைவராக இருந்து அங்குள்ள் உள்நாட்டுப் பாதுகாப்பையும், அமைதியையும் நிலைநாட்டுவதில் இவர் மிக முக்கியப் பங்காற்றினார்.

காஷ்மீர் எல்லைகள் மட்டுமின்றி, லடாக் எல்லை விவகாரங்கள், வடகிழக்கு மாநிலங்களின் உளவுப் பிரிவுகள் மற்றும் நக்சலைட் ஒழிப்புப் பிரிவுகளிலும் இவர் களமிறங்கிப் பணியாற்றிய அசாத்தியப் பணி அனுபவம் கொண்டவர்.