மகிளா காங்கிரஸ் தலைவிக்கு நேர்ந்த சங்கடம்... கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற நிர்வாகி!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில், புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் செரியன் பிலிப் வாயிலில் நின்று வரவேற்றுக்கொண்டிருந்தார். அப்போது கொல்லம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா அங்கு வந்துள்ளார்.
வழக்கறிஞரான பிந்து கிருஷ்ணாவைக் கண்டதும், செரியன் பிலிப் திடீரென பாய்ந்து அவரைக் கட்டிப்பிடித்து வரவேற்பது போல் முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிந்து கிருஷ்ணா, அவரது கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். இருப்பினும், செரியன் பிலிப் விடாமல் மீண்டும் அவரைக் கட்டிப்பிடிக்க முயன்ற செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, செரியன் பிலிப்பின் செயலுக்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அவர் அந்த இடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார். காங்கிரஸ் தலைமையகத்தின் முன்பே பெண் எம்.எல்.ஏ. ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சங்கடமான சூழல் கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.