போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற முக்கியக் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை - பஞ்சாப்பில் பரபரப்பு!

 

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தீபக் சிங், காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவர் தீபக் சிங்.

மவுசங் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது காவல்துறையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பாதுகாப்புக் கருதி காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதலில் தீபக் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.

போலீஸ் அதிகாரி சுடப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களுக்குத் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.