இந்திய விசா நடைமுறைகளில் பெரிய மாற்றம்... விண்ணப்பப் படிவ விவரங்கள் 70% குறைப்பு! 

 

வெளிநாட்டுப் பயணிகளின் இந்திய வருகையை மேலும் எளிமையாக்கும் வகையிலும், நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியாவில் தற்போது அமலில் உள்ள விசா நடைமுறைகளில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய விசா விண்ணப்பப் படிவங்கள் மிக நீண்டதாகவும், சிக்கலானதாகவும் இருப்பதாகக் கூறப்பட்ட புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய திருத்தங்களின் மூலம் விசா விண்ணப்பப் படிவத்தில் பயணிகள் நிரப்ப வேண்டிய தகவல்கள் மற்றும் விவரங்களின் அளவு 70 சதவீதம் வரை குறைக்கப்படவுள்ளது. இதனால் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் நேரமும், பரிசீலனைக்கான காத்திருப்பு காலமும் கணிசமாகக் குறையும். விசா வழங்கும் முறையில் இருந்த பல்வேறு குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அதன் பிரிவுகள் மற்றும் உள்பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன:

தற்போது நடைமுறையில் உள்ள 13 பிரதான விசா பிரிவுகள், இனி 9 பிரிவுகளாகச் சுருக்கப்படுகின்றன. ஏற்கனவே இருந்த 49 விசா உள்பிரிவுகள் இனி 23 ஆகக் குறைக்கப்படுகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டின் விசா வழிகாட்டுதல்கள் தற்போதைய தேவைகளுக்கு ஏற்பப் பயனாளர்களுக்கு எளிமையான முறையில் திருத்தப்படுகின்றன.

இந்த விசா நடைமுறை எளிமையாக்கத்தின் மூலம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தொழில்முனைவோர்கள், மருத்துவச் சுற்றுலா வருபவர்கள் மற்றும் மாணவர்கள் தடங்கலின்றி விரைவாக விசா பெற முடியும். இது இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என மத்திய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.