மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகையை உடைத்த மர்ம நபர்கள்!

 

சென்னை தாம்பரம் பகுதியில் தியாகி மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக வைக்கப்பட்டிருந்த சாலைப் பெயர் பலகையை மர்ம நபர்கள் பிடுங்கி வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 2014-இல் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்து, 'அசோக் சக்ரா' விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்குத் 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' எனத் தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் பெயர் சூட்டியது.

தாம்பரம் கேம்ப் சாலை சந்திப்பில் காவல் உதவி மையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை மர்ம நபர்கள் அடியோடு பிடுங்கி எறிந்துள்ளதுடன், அதில் இருந்த பெயரையும் அட்டையைக் கொண்டு மறைத்துள்ளனர். அருகில் உள்ள கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாகக் கருதி யாரேனும் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

நாட்டிற்காக உயிர்நீத்த மறைந்த ராணுவ வீரரின் பெயர் பலகையைச் சேதப்படுத்திய நபர்கள் மீது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையினரும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த பெயர் பலகையை மீண்டும் அமைத்துத் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.