மகர விளக்கு பூஜை... அதிகாலையிலேயே சபரிமலையில் குவிந்த பக்தர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புகழ்பெற்ற மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனுக்காகக் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திகை 1-ஆம் தேதியான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு கார்த்திகை 1-ஆம் தேதி முதல் 60 நாட்களுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சீசனுக்காகக் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்துத் தீபாராதனை நடத்தினார். வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
கார்த்திகை 1-ஆம் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடங்குகின்றன. கோவில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், புதிய மேல்சாந்தியாகச் சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்துச் சிறப்புப் பூஜைகளை நடத்தினார்.
நடப்பு சீசனை முன்னிட்டு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. சீசன் தொடக்கம் முதல் தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக இதுவரை 50 லட்சம் டின் அரவணைப் பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காகக் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சபரிமலைக்குச் செல்லும் சாலக்காயம் - பம்பை சாலை ரூ.14.4 கோடியில் 4 கி.மீ. தூரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய சாலையையும், சாலக்காயம் முதல் பம்பை வரையிலான மின்விளக்கு வசதியையும் கேரள அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் எளிமையான தரிசனத்திற்காகத் தேவசம் மற்றும் மாநில அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.