பண மோசடி வழக்கில் மலையாள நடிகர் சோபி ஜார்ஜ் கைது!
கேரளத் திரையுலகில் துணை நடிகராகவும், புகழ்பெற்ற இசைக்குழுவின் மேலாளராகவும் அறியப்படும் சோபி ஜார்ஜ், காசோலை மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாகக் கொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிடிவாரண்டு பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் வாங்கிய பணத்திற்குப் பதிலாக இவர் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவருக்குப் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை விழாக்களில் பாட வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், அங்கு அழைத்துச் சென்று பாட வைப்பதாகவும் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக இவர் மீது புகார்கள் உள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு முதலே கேரளா முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது மோசடிப் புகார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாகத் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் பலரை ஏமாற்றியதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த சோபி ஜார்ஜ்?
சோபி ஜார்ஜ் மலையாளத் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அதைவிட மேலாக, கேரளாவில் பிரபலமான பல மேடை இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்னணியில் இருந்தவர். ஒரு காலத்தில் கலைத்துறையில் செல்வாக்குடன் இருந்தவர், தற்போது பண மோசடி புகார்களில் சிக்கி இருப்பது கேரள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவையே உலுக்கிய பிரபல வயலின் கலைஞர் பாலபாஸ்கர் மரணம் தொடர்பான விசாரணையின் போது, சிபிஐ (CBI) முன்பு ஆஜராகி சோபி ஜார்ஜ் அளித்த சில முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.