அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' - மலேசியா பிரதமர் அறிவிப்பு!
மத்திய கிழக்கில் முற்றியுள்ள போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, மலேசிய அரசு தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கான ஒரு 'யுத்த காலச் சிக்கன நடவடிக்கையாக' இது பார்க்கப்படுகிறது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. போக்குவரத்துக்கான எரிபொருள் தேவையைக் குறைப்பதன் மூலம், நாட்டின் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிலையாக வைத்திருக்க மலேசியா திட்டமிட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் 34-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் எண்ணெய் உற்பத்தித் தளங்கள் மீதான தாக்குதல்களால் உற்பத்தி குறைந்துள்ளது. பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 500-ஐத் தாண்டியுள்ள நிலையில், மலேசியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே கோவிட் காலத்தில் வொர்க் ஃபிரம் ஹோம் முறையைச் சிறப்பாகக் கையாண்ட மலேசியா, தற்போது எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் அதே உத்தியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஈரான் - அமெரிக்கா போர் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால், மற்ற ஆசிய நாடுகளும் இது போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தால் தவித்து வந்த நடுத்தர வர்க்க ஊழியர்கள், அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். அலுவலகப் பயணச் செலவுகள் மிச்சமாவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்பதால் இது ஒரு 'ஸ்மார்ட்' முடிவாகப் பார்க்கப்படுகிறது.