மலேசிய பெண்ணிடம் சில்மிஷம்... ஆசிய விளையாட்டிலிருந்து இந்திய ஹாக்கி நடுவர் குரிந்தர் சிங் நீக்கம் - உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்!

 

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காகச் சென்றிருந்த இந்திய ஹாக்கி நடுவரும், தொழில்நுட்ப அதிகாரியுமான குரிந்தர் சிங் சங்கா பாலியல் சர்ச்சையில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த பெண் ஹாக்கி அதிகாரி மற்றும் விடுதி ஊழியரிடம் பாலியல் ரீதியில் முறைகேடாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான குழுவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குப் போட்டிகளை நடத்தும் அதிகாரப்பூர்வ நடுவராகக் குரிந்தர் சிங் சங்கா நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வந்தார். அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் போட்டி நடைபெறும் வளாகத்தில் அவரது நடவடிக்கைகள் குறித்துக் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.

நகோயாவில் தங்கியிருந்த போது, மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண் ஹாக்கி அதிகாரி ஒருவர், தனக்கு குரிந்தர் சிங் சங்கா பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டிக் குழுவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இது மட்டுமின்றி, அவர் தங்கியிருந்த விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடமும் அவர் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் போன்ற ஒரு பெரும் நிகழ்வில், அதுவும் அதிகாரப் பொறுப்பில் உள்ள ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குட்டுக் குழுவினர் உடனடியாக விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

இதன்படி, குரிந்தர் சிங் சங்கா மீதான புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆசிய விளையாட்டுப் போட்டிக் குழுவிலிருந்து முழுமையாக விடுவித்து நீக்கம் செய்தனர். மேலும், அவரை உடனடியாகத் ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்திய விளையாட்டு அதிகாரிகளின் இந்தச் செயல் சர்வதேச அளவில் தேசத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.