கூடலூரில் இரண்டுப் போரைக் கொன்ற ஆண் புலி பிடிப்பு - வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பிரிவில் கடந்த 28 நாட்களாகத் தேடப்பட்டு வந்த ஆண் புலி வெற்றிகரமாகக் கூண்டில் பிடிக்கப்பட்டு, சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கூடலூர் வனப்பிரிவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் புலியைப் பிடிக்க கடந்த 28 நாட்களாகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. சில்வர் கிளவுட் தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் அந்தப் புலி சிக்கியது.
புலியைப் பிடிக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் களமிறக்கப்பட்டனர். கும்கி யானைகள், கேமரா பொறிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பிரத்யேகக் கூண்டுகள் பயன்படுத்தப்பட்டு இப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
வனத்துறையினர் நடத்திய விரிவான ஆய்வில், கூடலூர் பகுதியில் நிகழ்ந்த இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆபத்தான புலி இதுதான் என்பது உறுதியானது. கூண்டில் சிக்கிய புலி, உடனடியாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அதன் உடல்நிலை குறித்து முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளுக்குப் பின்னர், அந்த ஆண் புலி பாதுகாப்பாகக் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டு முறையாக ஒப்படைக்கப்பட்டது.
பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 10 வயதுடைய இந்த ஆண் புலி தற்போது மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் விலங்கு பராமரிப்புக் குழுவினர் தொடர்ந்து அப்புலியின் உடல்நிலையைக் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.