பாஜக ஆட்சியை அகற்றும் வரை ஓயமாட்டேன் - மம்தா பானர்ஜி சவால்!
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சியை அகற்றும் வரை தாம் அரசியலை விட்டு விலகப் போவதில்லை எனத் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியே தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு எனக் குற்றம்சாட்டிய அவர், படிவங்களில் கையெழுத்திடும் போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்களில் பா.ஜனதா அரசு மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்வு செய்வதாக சாடியுள்ளார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மாணவர் மோதல்களின் பின்னணியில் பா.ஜனதாவின் திட்டமிட்ட சதி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தாம் அரசியலில் இருந்து சன்னியாசம் பெறப்போவதில்லை என்றும், பா.ஜனதா ஆட்சியை முழுமையாக அகற்றும் வரை ஓயப்போவதில்லை என்றும் சவால் விடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர மறுஆய்வு நடவடிக்கையின் போது பல உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீண்டும் சேர்க்கத் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.