டெய்லர் ஸ்விஃப்ட் இசைநிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த முயன்றவர் கைது... 21 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை உறுதி?!

 

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த டெய்லர் ஸ்விஃப்டின் 'எராஸ் டூர்' இசை நிகழ்ச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பெரன் ஏ.  என்ற 21 வயது இளைஞர் மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று ஆஸ்திரியாவின் வீனர் நியூஸ்டாட்  நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது, அந்த இளைஞர் அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்தார்: தான் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டதாகவும், அந்த அமைப்பிற்கு விசுவாசப் பிரமாணம் செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

வியன்னாவின் எர்ன்ஸ்ட் ஹாப்பல் ஸ்டேடியத்திற்கு வெளியே திரளும் சுமார் 30,000 ரசிகர்கள் மீது கத்திகள் அல்லது வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி, "முடிந்தவரை அதிகமான மக்களைக் கொல்ல" திட்டமிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகப் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2024 ஆகஸ்டில் அமெரிக்காவின் சிஐஏ அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த இளைஞர் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டார். இதனால் பாதுகாப்பு கருதி டெய்லர் ஸ்விஃப்டின் 3 முக்கிய இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இது உலகம் முழுவதும் இருந்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது, வெடிகுண்டுகள் தயாரிக்க முயற்சித்தது மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் ரசாயனங்களை ஏற்கனவே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.