நாமக்கல்லில் நகைக்காக 75 வயது மூதாட்டியை அடித்துக் கொன்ற இளைஞர் கைது!

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 75 வயது மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளிபாளையம் அருகே உள்ள பகுதியில் வசதி வந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், மூதாட்டியைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்த மூதாட்டியின் மகன் சுப்பிரமணியையும் அந்த நபர் கடுமையாகத் தாக்கி, கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துத் தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் மற்றும் அவர் கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில், பள்ளிபாளையம் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட்ட அந்த இளைஞரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து 5 சவரன் நகையைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் பள்ளிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.