சென்னையில் இரட்டைக் கொலை - ஒருவர் கைது, சக ஊழியருக்கு வலைவீச்சு!
சென்னை தி.நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவர் ஒரே நாளில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாகக் காவல் துறையினர் உடனடியாகச் செயல்பட்டு ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த 15 முக்கியக் காவல் துறை அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே, சென்னையின் மையப்பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை தி.நகர் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஊழியர்களாகப் பணியாற்றி வந்த ராஜேந்திரன் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும் இந்தக் கொலையில் பலியாகி உள்ளனர். இந்த இரட்டைக் கொலைகளுக்குப் பின்னால் அதே திருமண மண்டபத்தில் வேலை பார்த்து வந்த மணி என்ற சக ஊழியர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில், பலியான ராஜேந்திரனை கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கொலையாளி மணிக்கு உதவியாக இருந்த பாலாஜி என்பவரைத் தி.நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
முக்கியக் குற்றவாளியான சக ஊழியர் மணி, ரவிக்குமாரையும் கொலை செய்துவிட்டு தற்பொழுது தலைமறைவாகியுள்ளார். பணத் தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இந்த இரட்டைக் கொலைகள் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான மணியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள பாலாஜியிடம் போலீசார் தற்பொழுது ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.