இரட்டைக்கொலையில் திருப்பம் - இளம்பெண், சிறுமியைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரன் கைது!

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பெண் மற்றும் நான்கு வயது சிறுமியைப் படுகொலை செய்து, சடலங்களைச் சாக்கில் கட்டி ஆற்றில் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலக்காடு பகுதியில் பெண் மற்றும் நான்கு வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி, இருவரின் உடல்களையும் தனித்தனியாகத் துண்டு துண்டாக வெட்டிச் சாக்குகளில் கட்டி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாகிவிட்ட முக்கியக் குற்றவாளியைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

தீவிர விசாரணையின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த பிரவத் தாஸ் என்ற குற்றவாளி மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. உடனே அங்கு விரைந்த கேரள மாநிலக் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பிரவத் தாஸை கேரளா அழைத்து வந்துள்ள காவல்துறையினர், இந்த இரட்டைக்கொலைக்கான உண்மையான காரணம் என்ன, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.