அரசுப் பள்ளி உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலந்தவர் கைது - ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளியில் காலை உணவுச் சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவுச் சாம்பாரில் மர்ம நபர்கள் சாணி பவுடரைக் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி சமையலர் பணியிலிருந்து தனது மனைவி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஆறுமுகம் என்பவர் மாணவி ஒருவரைத் தூண்டிவிட்டுச் சாம்பாரில் சாணி பவுடரைக் கலக்கச் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் ஆறுமுகத்தை உடனடியாகக் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர், இது தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடைபெற்ற செயல் என்றும், ஆசிரியரின் விழிப்பான நடவடிக்கையால் சாம்பாரில் சாணி பவுடர் கலந்தது முன்கூட்டியே கண்டறியப்பட்டுப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்குத் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்களுக்கு உணவு பரிமாறும் முன் ஆசிரியர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.