ஆசிரியையிடம் 7 சவரன் செயின் பறித்த வழக்கில் விருதுநகரில் பதுங்கியிருந்த இளைஞர் கைது!

 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ரயில் நிலையம் அருகே மக்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியையிடம் தங்கச் செயினைப் பறித்துச் சென்ற நபர், விருதுநகரில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மாலை வண்டலூர் ரயில் நிலையம் அருகில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை அணிந்திருந்த 7 சவரன் தங்கச் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார். இந்தச் சம்பவத்தின்போது ஆசிரியை அழுது கொண்டு பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பகுதியிலிருந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.

விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் விருதுநகரில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர் கார்த்திக் ராஜ் என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் செயின் மீட்கப்பட்டு உரிய ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.