காதலியை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: இளைஞர் கைது!
ஆந்திராவில் வேறு நபருடன் பேசுகிறார் என்ற சந்தேகத்தில் பட்டதாரி இளம்பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்று, உடலுக்குப் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலனைப் போலீசார் கைது செய்தனர்.
குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் B.Tech படித்தபோது, சிலகலூரிபேட்டையைச் சேர்ந்த ஹசீனாவுக்கும் இனுபராஜுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சைதுலுவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
படிப்பை முடித்த ஹசீனா சுல்லூருபேட்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சைதுலு விவசாயம் செய்து வந்தார். வேலைக்குச் சென்ற பிறகு ஹசீனா போனில் பேசுவதைக் குறைத்ததால், அவர் வேறு ஒருவரை விரும்புவதாகச் சைதுலு சந்தேகமடைந்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சிந்தபள்ளி பகுதிக்கு ஹசீனாவை வரவழைத்துள்ளார் சைதுலு. அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹசீனாவைக் குத்தியுள்ளார். பின்னர் உடலின் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துவிட்டுத் தப்பியுள்ளார்.
மகள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், நாகார்ஜுன சாகர் கால்வாய்க்கரையில் பாதி எரிந்த நிலையில் ஹசீனாவின் சடலத்தைக் கைப்பற்றினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் சைதுலு தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.