இரண்டு மனைவிகள் இருக்கும்போதே 15 வயது சிறுமிக்குத் தாலி கட்டிய கொடுமை -  வாலிபர் போக்சோவில் கைது!

 

செங்கல்பட்டு அருகே இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருக்கும் போதே, 15 வயது சிறுமியை ஏமாற்றிப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 45 வயது நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (45). இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், ஜீவானந்தம் தனது பகுதியில் வசித்து வரும் 15 வயது பள்ளிச் சிறுமி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறித் தனியாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரத்தில் புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலயத் தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்தத் திருவிழாவைக் காண்பதற்காக அந்தச் சிறுமியும் அங்கு வந்துள்ளார். திருவிழாக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஜீவானந்தம், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தித் தாலி கட்டியுள்ளார்.

தாலி கட்டியதோடு மட்டுமன்றி, அந்தச் சிறுமியிடம் ஜீவானந்தம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இச்சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே விபரத்தைக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜீவானந்தத்திற்கு எதிராகப் புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோரின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் 15 வயது சிறுமியைக் கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜீவானந்தத்தை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு குடும்பங்கள் இருந்தும் சிறுமியின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த நபரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.