பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கியுடன் சிக்கியவருக்கு செப்.11 வரை நீதிமன்றக் காவல்!

 

மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட உலக நிதி தொழில்நுட்ப மாநாட்டு மையம் அருகே, பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறிக்கொண்டு போலி அடையாள அட்டை மற்றும் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள நீட்டா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் நடைபெற்ற உலக நிதி தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். இதையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், மாநாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள 'ஜியோ வேர்ல்டு பிளாசா' வணிக வளாகத்திற்கு வாலிபர் ஒருவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் வந்துள்ளார். துப்பாக்கி வைத்திருந்ததால் அவர்களை வணிக வளாகக் காவலாளிகள் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, தான் பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி அந்த வாலிபர் ஒரு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். காவலாளிகளுக்குச் சந்தேகம் ஏற்படவே, உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது; விசாரணையில் அந்த அடையாள அட்டை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலி அடையாள அட்டை வைத்திருந்த ரோகன் பாரிக் (24) மற்றும் அவருடன் வந்த பாதுகாவலர் திலிப் குண்டே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் கொடிய ஆயுதத்துடன் அத்துமீறி நுழைதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் மும்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 11-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இவர்கள் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதாக முதலில் பரவிய தகவலைக் காவல்துறை மறுத்துள்ளது. இந்த நபர்களின் கைதுக்கும் பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று தெரிவித்தாலும், இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.