லண்டனில் 22 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - ஒருவர் பலி!

 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் நகரின் பிளாக்வால்வே பகுதியில் 22 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வரும் நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இக்கட்டிடத்தின் 17-வது தளத்தில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாலை நேரத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது தீ மளமளவெனப் பரவியதால், குடியிருப்பில் வசிப்பவர்கள் அலறியடித்துக்கொண்டு படிக்கட்டுகள் வழியாகக் கீழே ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சுதாரித்துக்கொண்டு தீயை அணைக்கும் பணியிலும், சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும், இக்கோர விபத்தில் சிக்கி ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயைக் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்; உயிரிழந்தவர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.