கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு - வேலூரில் சோகம்!

 

வேலூர் மாவட்டத்தில், அன்பால் இணைந்த குடும்பத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு உயிரைப் பறித்ததுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது பெரும் சோகத்தையும், உறவினர்களிடையே துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவருக்கும் பிரேமகுமாரி (28) என்பவருக்கும் திருமணம் ஆகி வாழ்ந்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கணவன்-மனைவி இடையே திடீரென குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றியதால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரேமகுமாரி, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டின் அருகில் இருந்த கிணற்றை நோக்கி ஓடியுள்ளார்.

மனைவி கிணற்றில் குதிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன், அவரை எப்படிக் காப்பாவது என்ற பதற்றத்தில் தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கிணற்றில் இருந்த பாறையின் மீது பார்த்திபனின் தலை பலமாக மோதியது. இதில் நிலைகுலைந்த அவர், தண்ணீரிலேயே மயங்கி மூழ்கி உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரேமகுமாரியைப் பத்திரமாக மீட்டனர். ஆனால், பார்த்திபன் தண்ணீருக்குள் மூழ்கி விட்டதால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. இது குறித்த தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பார்த்திபனின் உடலை மீட்டனர்.

பார்த்திபனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனைவியைக் காப்பாற்றத் துணிந்த கணவன், அதே முயற்சியில் உயிரை விட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் கதறலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.