பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ரூ.1.25 லட்சம் அபராதம், இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் 54 வயது பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கடந்த 2025 ஜனவரி மாதம் 54 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (24) என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், குற்றவாளி ராஜாவுக்கு மொத்தம் 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இத்தகைய கடுமையான தண்டனை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.