மனைவியின் நடத்தையில் சந்தேகம் - 3 மாத ஆண் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்ற தந்தை!
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவர் தனது மூன்று மாத பச்சிளம் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்ற கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷிஷ் பூரியா. இவருக்கும் இவரது மனைவி ஹினாபென் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியின் நடத்தையின் மீது ஆஷிஷ் சந்தேகம் கொண்டுள்ளார். மேலும், தனது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று பலருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தூங்கிக் கொண்டிருந்த மூன்று மாத ஆண் குழந்தை 'லவியான்ஷ்' குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், ஆத்திரம் முற்றிய நிலையில் குழந்தையைத் தூக்கி அருகிலிருந்த கிணற்றில் வீசியுள்ளார்.
கிணற்றின் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மஹிசாகர் மாவட்டக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.